![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXnXi-dHng_gieWUuTOA0UKWXlkLNmMCq6v84xo7jGLYL0qgCBwKkWwqDS_Kbmm6u9JFhcjHJjVhIV3X4x0-CgShyphenhyphenwZN3oBsrTexhGjurtMR3Niafy-dyH2P7YcrmyXHpOo88mKV97GUtk/s400/dec+-+01.jpg)
கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? ஜாதகம், பெயர்ராசி எல்லாம் பார்க்காமல், வத்தலோ தொத்தலோ கிடைத்த பெண்ணை மணந்து கொள்ளுங்கள்.
யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் ஆசைப்படுங்கள். ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஸ்டாக் மார்க்கெட், பொருளாதார மந்தம், வேலை இழப்பு, இடைத்தேர்தல், மின்னணு இயந்திரம் குளறுபடி, ஜெயலலிதா, கொடைநாடு, கலைஞர் கடிதம், பெட்ரோல் விலை உயர்வு, துவரம்பருப்பு விலை உயர்வு, தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு, எண்கவுண்டர், ஈழம், அல்குவைதா, அமெரிக்கா, கியூபா, எதிர்வீட்டு பிகர், பக்கத்து வீட்டு நாய்க்குட்டி, தெருமுனை பிள்ளையார் கோயில், 23சி பஸ், லேடீஸ் காலேஜ், பார்க், பீச், இத்யாதி.. இத்யாதி பிரச்சினைகள், மகிழ்ச்சிகள், கோபங்கள் எல்லா கருமத்தையும், கந்தாயத்தையும் மறந்துடுங்க. வாழும் காலத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளுங்கள்.
ஏனெனில், உங்களுக்கு இன்னமும் இருப்பது இரண்டேகால் வருடம் மட்டுமே. 2012 டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது. இப்படித்தான் பீதியைக் கிளப்பி, எல்லோருக்கும் பேதியை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டர்நெட் சைட்களில்.
மாயா என்றால் நமீதா நடிக்கும் கிளுகிளு படம் மட்டுமல்ல. மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.
மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg3V4AC5JKXA816hIz5yIYFP2SlrlKOgvXV9kCEf5YctXihiuuOEnVIJcjBad2A53q6pWJcKWsqehln5ZvVT1CmQNt4mnh68r7xExG0mpBdCV3hUagICH2G4lbFhZVNz5ceflFlEb2hyphenhyphengs/s400/maya+-+culture.jpg)
சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?
சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.
துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா?
ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.
சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.
அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை பெற்ற நீங்கள் குமுதம் ரிப்போர்ட்டரில் இந்த கட்டுரையை வாசிக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjht-qRhxgN39AqZIvECbU_oDfsQZcQB-Jyacb_46Jby1qM-S4C4B2NmNOwwERB1tiXauHS99gk9DL5MRInmzLFXDoV_cB78vab0Lh9uXQYK8EvS4XB2aeLFYsLl8csQAUewjJCW2xSOg-X/s400/maya+-+calendar.jpg)
உண்மையில் 2012ல் என்னதான் நடக்கப் போகிறது?
எதிர்காலம் குறித்து சீட்டுக்கட்டிலிருந்து கிளி எடுத்துப்போடும் சீட்டை வைத்து சொல்லப்படும் பலன்களை நீங்கள் நம்புகிறீர்களா? இரத்தமும், சதையும், எலும்பும், மூளையும், சிந்தனைகளுமாய் வளர்ந்த உங்களின் எதிர்காலம் ஒரே ஒரு நெல்லுக்காக கிளி அவசரமாக எடுத்துப்போடும் சீட்டில்தான் இருக்கிறதா என்ன? கிளிஜோசியரின் கிளி மாதிரி தான் ஆளாளுக்கு புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படித்தான் 1999ஆம் ஆண்டு முடிந்ததுமே உலகம் அழிந்துவிடும் என்று பலரும் டுமீல் விட்டுத் திரிந்தார்கள். நாஸ்ட்ரடாமஸ் கணித்திருக்கிறார், அவரின் கணிப்பு பொய்யானதில்லை என்று அடித்துப் பேசினார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் பாகுபாடின்றி நடுநடுங்கி செத்தது உலகம். உலகம் தான் அழியப் போகிறதே என்ற எண்ணத்தில் பல்வேறு சமூகக் குற்றங்கள் நடந்தது. நம்மூர் கிராமப்புறங்களில் கூட இந்த பீதியைப் பயன்படுத்தி தென்னந்தோப்புகளிலும், கம்மாய்க்கரைகளிலும் பல பாலியல் குற்றங்கள் நடந்ததாக பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம். 1999 முடிந்து சரியாக பத்து வருடங்கள் கடந்துவிட்டது. நாமெல்லாம் செத்தா போய் விட்டோம்?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFciK6CzpxWEtsh9QeQwdosUuD36_U1G1XvVxeoiuFODCQusWc2cCyGJDON4O_8f4FytzHLc_JHKAU9oex2WsQiUajcnLlfdKu85Z4-fcUUtoMtZFePM4lEsXGetuzRBpjvKio2ACrnhTm/s400/dec+-+04.jpg)
நாம் எப்போது அழிவோம், எப்படி அழிவோம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அழியவேண்டிய நேரத்தில் நிச்சயமாக அழிவோம். அது நிச்சயமாக இப்போது அல்ல. ஆகையால் இப்போதைக்கு உலகம் அழிவதைப் பற்றிய பழைய கணிப்புகளை வாசிக்காமல், ப்ரீயாக விடுவதே நம் மனநிம்மதிக்கு உத்தரவாதம் தரும் செயலாக இருக்க முடியும்.
2012 டிசம்பர் மாதம் ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் முடிவடையும் என்று ஒக்கேனக்கல் செயல்பாட்டு கால அட்டவணைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திட்டம் முடிவடைந்தாலும் சரி, முடிவடையா விட்டாலும் சரி. ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் குறித்த புலனாய்வுக் கட்டுரை ஒன்றினை 2013 ஜனவரி மாத குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்களும், நானும் படித்துக் கொண்டிருக்கப்போவது மட்டும் உறுதி.
No comments:
Post a Comment